கற்பகம் மருத்துவமனையில் கண்புரைக்கு அதி நவீன மருத்துவ சிகிச்சை
By DIN | Published On : 19th May 2019 05:36 AM | Last Updated : 19th May 2019 05:36 AM | அ+அ அ- |

கோவை, ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சையில்லா நவீன சிகிச்சை மூலம் தீர்வு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (65) என்பவர் கண் புரை காரணமாக பார்வையை முழுவதுமாக இழந்து அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவருக்கு, மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், கண் மருத்துவருமான நேகா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மயக்க ஊசி, அறுவை இல்லாமல் சொட்டு மருந்துகளை உபயோகித்தே புரையை நீக்கினர்.
இதையடுத்து ஒரே நாளில் இழந்த பார்வையை மீட்ட தட்சிணாமூர்த்தி, மறுநாளே வீடு திரும்பினார். இதுபோன்ற அதி நவீன மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக, தங்குமிடம், உணவு செலவுகள் ஏதுமின்றியே ஏழை நோயாளிகளுக்கு அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.