பேருந்து வசதி கேட்டு மலைவாழ் மக்கள் மனு
By DIN | Published On : 19th May 2019 05:37 AM | Last Updated : 19th May 2019 05:37 AM | அ+அ அ- |

பொள்ளாச்சியை அடுத்த சுள்ளிமேட்டுபதி, பாறைபதி மலைவாழ் மக்கள் பேருந்து வசதி கேட்டு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சிக்கு உள்பட்ட சுள்ளிமேட்டுபதி, பாறைபதி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்துவருகிறது. இதனால், இவர்களின் குழந்தைகள் 3 கி.மீ. வரை நடந்துசென்றுதான் பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை இருந்துவருகிறது. இதனால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையை மாற்ற தங்கள் பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறி 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.