மேட்டுப்பாளையம் அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர கலந்தாய்வு
By DIN | Published On : 19th May 2019 05:35 AM | Last Updated : 19th May 2019 05:35 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (மே 21, 22) நேர்காணல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வர் ஸ்வர்ணலதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் வரும் 2019-20ஆம் கல்யாண்டில் பி.ஏ. ஆங்கிலம், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.காம், பி.காம் சி.ஏ, பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 420 காலி இடங்கள் உள்ளன. இதற்கான நேர்காணல் கலந்தாய்வு செவ்வாய்கிழமை (மே 21) காலை 10 மணிக்கும், மற்ற பாடப்பரிவுகளுக்கு புதன்கிழமை (மே 22) காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
மாணவர்கள், பெற்றோருடன் காலை 9 மணிக்குள் கல்லூரி வளாகத்துக்குள் இருக்க வேண்டும். 10 மணிக்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டி இருப்பதால் குடிநீர், உணவு ஆகியவற்றை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்க்கை உறுதி இல்லை. மதிப்பெண், இனம் அடிப்படையில் மட்டும்தான் சேர்க்கை வழங்கப்படும். மாணவ, மாணவியர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நகல் சான்றிதல்களையும் கொண்டு வர வேண்டும்.
தமிழகம், கேரளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் படித்த மாணவ, மாணவியர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதிச்சான்று பெற்று சேர்க்கை நாளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.