வாக்குப் பதிவு மையங்களில் கேமரா பொருத்தும் பணியில் மாணவர்கள்
By DIN | Published On : 19th May 2019 05:34 AM | Last Updated : 19th May 2019 05:34 AM | அ+அ அ- |

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி 324 வாக்குப் பதிவு மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இங்கு பொருத்தப்படும் கேமராவில் நேரடியாக காட்சிகள் பதிவாவது மட்டுமன்றி மாவட்ட தேர்தல் அலுவலகம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலும் நேரடியாக அதைப் பார்க்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தபப்ட்டுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கும் பணி சனிக்கிழமை காலை துவங்கியது. சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜ் மேற்பார்வையில் இந்தப் பொருள்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.