அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காவிட்டால்தான் தனியார் பள்ளிகளை நாடும் நிலை உருவாக வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை
By DIN | Published On : 26th May 2019 03:01 AM | Last Updated : 26th May 2019 03:01 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காவிட்டால்தான் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் நிலை உருவாக வேண்டும் என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோவை, கடலூர், சென்னை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து திருச்சி நோக்கி சைக்கிள் பிரசாரப் பயணம் நடைபெறுகிறது. அதன்படி, கோவை, காந்திபுரத்தில் நடைபெற்ற பிரசாரப் பயண தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மயில்சாமி அண்ணாதுரை, பிரசாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
நானும் அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் பயின்றவன்தான். அதனால் எனக்கு எந்தக் குறையும் ஏற்பட்டதில்லை. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதன் பிறகு, அரசுப் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.அரசுப் பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் படித்து வந்தவர்கள்தான் இன்று சிறந்த பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் இருக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் என்ற வீதத்தில் ஆண்டுதோறும் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி நிதியை அரசு செலவிடுகின்றன.
என்னுடன் பணியாற்றிய சக ஆராய்ச்சியாளர்களில் 90 சதவீதம் பேர்கள் அரசுப் பள்ளிகளில் தாய் மொழியில் படித்து வந்தவர்கள்தான். அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்ப பலமுறை முயன்றும் தோற்றுப்போயின.
ஆனால், அரசுப் பள்ளிகளில், தாய் மொழி வழியில் பயின்ற மாணவர்கள் அதை சாதித்துக் காட்டினோம். அடுத்த தலைமுறை குழந்தைகள் நல்லவர்களாக, சமுதாய சிந்தனை உடையவர்களாக வளர வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் பயில வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் பல தடைகளையும் கடந்து வந்ததால்தான் பின்னாளில் எங்களால் சாதனை படைக்க முடிந்தது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு பேசும்போது, தமிழகம், கேரள மாநிலங்களில்தான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். தமிழகத்தில் பெற்றோர்கள் கல்விக்காக அதிகம் செலவிடுகின்றனர்.
மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் குறைவாகவே கேரளத்துக்கு ஒதுக்குகிறது. இருப்பினும் கேரள அரசு கல்விக்கு முன்னுரிமை அளித்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சுமார் 5,300 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கழிப்பிடங்கள் இல்லை. இதுபோன்ற பல காரணங்களால் வருகைப் பதிவு குறைகிறது. இதனைக் காரணம் காட்டி சுமார் 3,500 பள்ளிகளை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
எனவேதான் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சுமார் 1,500 கிலோ மீட்டர் சைக்கிள் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்றார். மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் தினேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலர் எஸ்.பாலா, மாவட்டச் செயலர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.