ஆட்டோ ஓட்டுநர் கொலை: இருவருக்கு வலை
By DIN | Published On : 26th May 2019 04:50 AM | Last Updated : 26th May 2019 04:50 AM | அ+அ அ- |

கோவையில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜு (52). இவர் கடந்த சில நாள்களுக்கு முன் புதுப்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, ரத்தினபுரியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் குடிபோதையில் அவ்வழியாக வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த புதுப்பாலத்தைச் சேர்ந்த சரவணன் (30), மணிகண்டன் (35) ஆகியோர் சக்திவேலிடம் இருந்த பணத்தை எடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜு, அவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் மணிகண்டன் அகியோர் கட்டையால் ராஜுவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த ராஜுவை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, ரத்தினபுரி போலீஸார் ராஜுவை தாக்கிய சரவணன், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தலைமறைவாக உள்ள சரவணன் , மணிகண்டனை தேடி வருகின்றனர்.