கோவை அருகே கழிவுப் பஞ்சு கிடங்கில் தீ விபத்து
By DIN | Published On : 26th May 2019 01:15 AM | Last Updated : 26th May 2019 01:15 AM | அ+அ அ- |

கோவை, இருகூரில் கழிவுப் பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுப் பொதிகள் தீயில் கருகின.
கோவை, பீளமேட்டைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இருகூர், கண்ணப்பன் நகரில் வாடகைக்கு கிடங்கு எடுத்து கழிவுப் பஞ்சுகளை வாங்கி தரம் பிரித்து பஞ்சாலைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது கிடங்கில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, பஞ்சு இருப்பு வைத்திருந்த பகுதியில் இருந்து கரும் புகை வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்த அருகிலிருந்த பொது மக்கள் சத்தமிட்டுள்ளனர். உடனே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கிடங்கில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், தீ மளமளவெனப் பரவியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதிகள் தீயில் கருகின. தகவலறிந்து சூலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையில் 20க்கு மேற்பட்ட வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், கிடங்கில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக் கொண்டிருந்ததால் சனிக்கிழமை இரவு வரை தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சுப் பொதிகள் தீயில் கருகின. இது குறித்து தகவலறிந்து சிங்காநல்லுர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.