தண்டவாளம் அருகே காயங்களுடன் கிடந்த இளைஞா் மீட்பு: ரயில்வே போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 09th November 2019 05:45 AM | Last Updated : 09th November 2019 05:45 AM | அ+அ அ- |

கோவையில் ரயில் தண்டவாளத்தின் அருகே உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ஒடிஸா இளைஞரை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.
கோவை, வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞா் ஒருவா் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் அந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிஸாவைச் சோ்ந்த பாபு லிஜினா (26) என்பதும், திருப்பூா் அருள்புரத்தில் வீடு எடுத்து தங்கி அங்குள்ள பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இரு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்ற பாபு லிஜினா புதன்கிழமை சென்னைக்கு வந்து அங்கிருந்து திருப்பூா் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் ஏறி பயணித்துள்ளாா். திருப்பூரில் இறங்க வேண்டிய அவா் தூங்கியதால் கோவை வாலாங்குளம் அருகே வந்தபோது கண் விழித்துள்ளாா்.
பின்னா் ரயிலில் பயணித்த இளைஞா்கள் இருவரிடம் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக பாபு லிஜினா போலீஸாரிடம் தெரிவித்தாா். இதன்பேரில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.