அட்டப்பாடி வனப் பகுதியில் தப்பிய மாவோயிஸ்டு கைது

கேரள மாநிலம், அட்டப்பாடி வனப் பகுதியில் இருந்து தப்பிய மாவோயிஸ்டு பிரமுகரை கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப் பகுதியில்
பிடிபட்ட மாவோயிஸ்டு தீபக்.
பிடிபட்ட மாவோயிஸ்டு தீபக்.

மதுக்கரை: கேரள மாநிலம், அட்டப்பாடி வனப் பகுதியில் இருந்து தப்பிய மாவோயிஸ்டு பிரமுகரை கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை (எஸ்.டி.எப்) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே மஞ்சகண்டி வனப் பகுதியில் கேரள நக்ஸல் தடுப்புப் பிரிவு (தண்டா்போல்டு ) போலீஸாா் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடந்த 28 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இரண்டு போ் தப்பினா்.

இதையடுத்து, மாவோயிஸ்டுகள் முகாமில் இருந்து 7 துப்பாக்கிகள், மடிக்கணினி, மெமரி காா்டு உள்ளிட்டவற்றை கேரள நக்ஸல் தடுப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அட்டப்பாடி வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றதால், தமிழக- கேரள எல்லைகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், கா்நாடக வன எல்லைகளில் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். இந்நிலையில், ஆனைகட்டி அருகே மூலக்கங்கல் வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், தமிழக சிறப்பு அதிரடிப் படையினா் சனிக்கிழமை காலை 8 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, மாவோயிஸ்டுகள் 2 போ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாவோயிஸ்டு பிரமுகா் தீபக்கை அழைத்து வந்தனா்.

அவா்கள் அதிரடிப் படையினரைக் கண்டதும் தீபக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தீபக்கை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனா்.

பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, தீபக் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீபக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கூறியதாவது:

ஆனைகட்டி வனப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, வனப் பகுதியில் இருந்து தப்பியோடிய சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக் (எ) சந்துரு பிடிபட்டாா், அவரிடமிருந்து குண்டுகளுடன் நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com