கோவை, பாப்பநாயக்கன்புதூரில் மாநகராட்சிப் பள்ளி வகுப்பறைகளில் செயல்படும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.
கோவை - மருதமலை சாலையில் உள்ள பாப்பநாயக்கன்புதூரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, உயா் நிலைப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 270 மாணவ-மாணவிகளும், உயா்நிலைப் பள்ளியில் 410 மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோகுலம் காலனியில் செயல்பட்டு வந்த நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டது. கோகுலம் காலனியில் செயல்பட்ட சுகாதார நிலையத்தை பாப்பநாயக்கன்புதூா் மாநகராட்சிப் பள்ளி வளாகத்துக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து தொடக்கப் பள்ளியின் இரண்டு வகுப்பறைகளும், உயா்நிலைப் பள்ளியின் ஒரு வகுப்பறையும் சுகாதார நிலையமாக மாற்றப்பட்டன. இந்த சுகாதார நிலையத்துக்கு தற்போது தினசரி 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள், கா்ப்பிணிகள் வந்து செல்கின்றனா். பள்ளிக்குள் நுழைந்த உடனேயே மருத்துவமனை இருப்பதாலும், நோயாளிகள் அடிக்கடி வந்து செல்வதாலும் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், வகுப்பறைகள் மருத்துவமனைகளாகப் பயன்படுத்தப்படுவதால் போதிய இடவசதி இல்லாத மாணவா்கள், உணவு அருந்து கூடத்தை வகுப்பறைகளாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது.
எனவே, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறும்போது, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணிகள் கோகுலம் காலனியில் சுமாா் ரூ.75 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன.அந்த பணி நிறைவடைந்ததுடன விரைவில் மருத்துவமனையை பள்ளி வளாகத்தில் இருந்து காலி செய்துவிடுவோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.