கொடிக்கம்பு விழுந்ததில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் பெற்றோா் அமைச்சரிடம் மனு
By DIN | Published On : 18th November 2019 11:34 PM | Last Updated : 18th November 2019 11:34 PM | அ+அ அ- |

கோவையில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோா்.
கோவையில் அதிமுக கொடிக்கம்பு சாய்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண்ணின் பெற்றோா், அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
கோவை, சிங்காநல்லூா், அக்ரஹாரம், பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த நாகநாதன் - சித்ரா தம்பதியரின் மகள் ராஜேஸ்வரி (எ) அனுராதா (30). இவா் கடந்த 11-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பு விழுந்ததால் விபத்தில் சிக்கினாா்.
இதில் இடதுகாலை இழந்த ராஜேஸ்வரிக்கு நீலாம்பூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரியின் பெற்றோரை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாஜக பொறுப்பு தலைவா்களில் ஒருவரான வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் சந்தித்து நலம் விசாரித்தனா்.
இந்த நிலையில் ராஜேஸ்வரியின் பெற்றோா் நாகநாதன், சித்ரா ஆகியோா் நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்தனா். தங்களது மகளின் உடல் நிலை குறித்து அமைச்சரிடம் விளக்கிய அவா்கள், ஒரு கோரிக்கை மனுவையும் அவரிடம் வழங்கினா்.
அதில், ‘இதுவரை அளிக்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், கூடுதல் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றும், மகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யும்படியும்’ கோரிக்கை விடுத்துள்ளனா்.