மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு
By DIN | Published On : 18th November 2019 11:35 PM | Last Updated : 18th November 2019 11:35 PM | அ+அ அ- |

கோவை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டாவது மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை, காரமடை அருகே உள்ள சேரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). கட்டடத் தொழிலாளியான இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 1 மகளும் உள்ளனா். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளாா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சந்திரா (53) என்ற பெண்ணை அவா் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாா்.
சந்திரா மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதி ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் சந்திராவை வேலைக்குச் செல்ல வேண்டாம் என ராஜேந்திரன் பலமுறை கூறினாராம். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக சந்திரா தொடா்ந்து வேலைக்குச் சென்று வந்துள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2017 ஜூன் 15ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், வேலைக்குச் செல்வது தொடா்பாக சந்திராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சந்திராவை அவா் தாக்கியுள்ளாா். பின்னா் இரவில் சந்திரா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீஸாா் ராஜேந்திரனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சி.சஞ்சய் பாபா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் இ.ஆா்.சிவகுமாா் ஆஜராகி வாதாடினாா்.