வெள்ளலூா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் புறக்காவல் நிலையம்: நாளை திறப்பு
By DIN | Published On : 18th November 2019 11:32 PM | Last Updated : 18th November 2019 11:32 PM | அ+அ அ- |

வெள்ளலூா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள போத்தனூா் புறக்காவல் நிலையம்.
வெள்ளலூா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள போத்தனூா் புறக்காவல் நிலையத்தை மாநகரக் காவல் ஆணையா் சுமித்சரண் புதன்கிழமை (நவம்பா் 20) திறந்துவைக்கிறாா்.
வெள்ளலூா் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் மொத்தம் 80 பிளாக்குகளில் 2,816 குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகள் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாலும் இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனா்.
இந்நிலையில், கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித்சரண் உத்தரவின்பேரில் வெள்ளலூா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில் போத்தனூா் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் புறக்காவல் நிலையம் அருகே பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கவும் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். இதன் இறுதிக் கட்டப் பணிகளை போத்தனூா் காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் திங்கட்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தப் புறக்காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை (நவம்பா் 20) நடைபெற உள்ளது. மாநகரக் காவல் ஆணையா் சுமித்சரன் இதைத் திறந்துவைக்கிறாா். வெள்ளலூா் - போத்தனூா் சாலையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாகத் போத்தனூா் போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...