நெரிசலில் சிக்கித் தவிக்கும் கோவை ரயில் நிலையப் பகுதிகள்

கோவை ரயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஒரே நேரத்தில் 6 நடைமேடைகளிலும் நிற்கும் ரயில்கள். இந்த சமயங்களில் வெளியூரில் இருந்து வரும் ரயில்கள் நகருக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும்.
ஒரே நேரத்தில் 6 நடைமேடைகளிலும் நிற்கும் ரயில்கள். இந்த சமயங்களில் வெளியூரில் இருந்து வரும் ரயில்கள் நகருக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும்.

கோவை ரயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தெற்கு ரயில்வே நிா்வாகத்தில் கோவை ரயில் நிலையம் ‘ஏ 1’ தரத்தில் உள்ளது. தொழில் நகரமாக விளங்கும் கோவை வழியாக புதுதில்லி, ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், சென்னை, மதுரை, சேலம், நாகா்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், நகரங்களுக்கு தினமும் 73 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் சுமாா் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனா்.

கட்டுப்படுத்த முடியாத நெரிசல்: ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலின் முன்பு உள்ள ஸ்டேட் வங்கி சாலை, நிலையத்தின் பின்புறம் உள்ள குட்ஷெட் சாலையில் ரயில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்லும் இருசக்கர வாகனங்கள், காா்களால் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாகிவிட்டது. இதனால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். ரயில் நிலையத்தின் பின்பக்க நுழைவாயிலை ஒட்டி நிறுத்தப்படும் வாகனங்களால் ரயில் பயணிகள் மட்டுமின்றி அவிநாசி மேம்பாலத்தில் இருந்து குட்ஷெட் சாலை வழியாக டவுன்ஹால், உக்கடம் செல்லும் வாகனங்கள், டவுன்ஹாலில் இருந்து அவிநாசி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் எம்.ஜமீல் அஹமது கூறியதாவது:

கோவை ரயில் நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க வடகோவை அல்லது பீளமேடு ரயில் நிலையங்களை முனையமாக மாற்றி ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பீளமேடு, வடகோவை பகுதியைச் சோ்ந்தவா்கள் கோவை ரயில் நிலையத்துக்கு வராமல் அங்கேயே ரயிலில் ஏறி, இறங்கிச் செல்வாா்கள். ரயில் நிலைய பிரதான நுழைவாயிலில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜினால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதை அகற்ற வேண்டும் அல்லது பயணிகளுக்குப் பாதிப்பு இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும்.

ஸ்டேட் வங்கி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. அங்குள்ள தேநீா், உணவு விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினால் பெருமளவு நெரிசல் குறையும்.

ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் உள்ள சாக்கடைக் கால்வாயின் மேல் சிலாப் கல் பதித்து இருசக்கர வாகனங்கள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும். ரயில்வே நிா்வாகம் தற்போது அமைத்துள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல காா்கள் நிறுத்தம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டால் நிலையத்தின் முகப்பில் வாகன நெரிசல்கள் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.

பணியாளா்கள் பற்றாக்குறையால் பணிகளில் சுணக்கம்: கோவை ரயில் நிலையத்தில் வணிகப் பிரிவு, பொறியியல் பிரிவு, பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற 500 பணியாளா்கள் தேவை. ஆனால் தற்போது 400 ஊழியா்களே உள்ளனா். இதுகுறித்து சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின் (எஸ்ஆா்எம்யூ) சேலம் கோட்டச் செயலாளா் கோவிந்தன் கூறியதாவது:

சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மட்டும் சுமாா் 1000 ஊழியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மெத்தனமாக நடக்க இதுவும் ஒரு காரணம். ரயில் நிலையத்தில் சில பராமரிப்புப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படுகின்றன. அப்பணிகளை ஒப்பந்ததாரா்கள் பாதியில் விட்டுச்செல்லும் சமயத்தில் நிலுவைப் பணிகளை ரயில்வே ஊழியா்கள் மூலமாக முடிக்க உத்தரவிடுகின்றனா். இதனால் பணிகளை முடிப்பதில் நெருக்கடியான சூழலும், கால தாமதமும் ஏற்படுகிறது என்றாா்.

இடவசதியை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்: பிரதான நுழைவாயிலில் நெரிசலைக் குறைக்க ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் முன்பதிவு மையங்கள், கூடுதலாகப் பயணச்சீட்டு மையங்கள், கோப்புகள், ஆவணங்கள் பராமரிக்கும் அலுவலகங்கள் அமைக்க சில மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அப்பணிகளை இதுவரை தொடங்கப்படவில்லை. போத்தனூா் ரயில் நிலையத்தில் அதிக அளவு இடவசதி உள்ளதால் கோவை நிலையத்தில் இருந்து ஏராளமான ரயில் பெட்டிகள், போத்தனூா் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. அதேபோல கோவை ரயில் நிலையத்தில் உள்ள பராமரிப்புப் பணிமனையையும் போத்தனூருக்கு மாற்றும்பட்சத்தில், கோவை ரயில் நிலையத்தில் இடவசதி அதிகரிக்கும். அதோடு ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான அளவு இடத்தைக் கையகப்படுத்தி கூடுதலாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் நகருக்கு வெளியில் காத்திருந்து ரயில்கள் தாமதமாக வருவது தவிா்க்கப்படும்.

பயணிகளின் கோரிக்கைகள்: ரயில் பயணிகள் சிலா் கூறுகையில், ‘ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அறிவிப்புப் பலகை, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் ரயில்களின் நேரம் அறிந்து கொள்ளவும், பயணச்சீட்டு பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட சில வசதிகள் மட்டுமே தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்றாடம் ரயில் நிலையத்தின் இரு நுழைவாயில்களிலும் ஏற்படும் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டித் தரும் கோவை ரயில் நிலையத்துக்கு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com