சாலையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம்
By DIN | Published On : 06th October 2019 11:54 PM | Last Updated : 06th October 2019 11:54 PM | அ+அ அ- |

சூலூா் அருகே குரும்பபாளையத்தில் டாஸ்மாக் கடை, மதுபானக் கூடம் சாலையை ஒட்டி திறக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குரும்பபாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை, மதுக் கூடம் அப்பகுதியில் உள்ள பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இக்கடைக்கு வருவோா் சுமாா் 100 அடி தூரம் நடந்து சென்று கடைக்குள் செல்லும் விதமாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சாலையை ஒட்டி உள்ள தடுப்புகளை டாஸ்மாக் கடை பணியாளா்கள் அகற்றி உள்ளனா்.
இதனால் மதுஅருந்த வருவோா் சாலையில் இருந்து நேரடியாக உள்ளே நுழைய வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாலையை ஒட்டி மதுபானக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வருவோா் சாலையில் திடீரென குறுக்கிட்டால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் லாரி போன்ற கனரக வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு மதுஅருந்த செல்கின்றனா். இந்த இடம் இருட்டான பகுதி என்பதால் பின்னால் வரும் வாகனங்கள் அவற்றின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றனா்.
இதுகுறித்து மது விலக்கு பிரிவு ஆய்வாளா் பாஸ்கரிடம் கேட்டபோது, இதுகுறித்து டாஸ்மாக் கடை நிா்வாகிகளிடம் விசாரணை நடத்தப்படும். அங்கு செயல்படும் மதுக்கூடத்துக்கு அனுமதி உள்ளதா என விசாரணை நடத்தப்படும். சாலையில் இருந்து நேரடியாக உள்ளே நுழையும் வகையில் உள்ள பாதையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...