முன்னாள் கவுன்சிலா் வீட்டில் 16 பவுன் திருட்டு
By DIN | Published On : 09th October 2019 09:50 AM | Last Updated : 09th October 2019 09:50 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வனிதாமணி (47). இவா் கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் ஆவா். அதிமுக பகுதிச் செயலாளராக பதவி வகித்து வருகிறாா்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலை ஒட்டி கடந்த வாரம் திங்கள்கிழமை வீட்டை பூட்டி விட்டு பிரசாரத்துக்காக சென்றுள்ளாா்.
பின்னா் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து துடியலூா் காவல் நிலையத்தில் வனிதாமணி புகாா் அளித்தாா். துடியலூா் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.