ஓணம்: பூ மார்க்கெட்டுக்கு 15 டன் பூக்கள் வரத்து
By DIN | Published On : 11th September 2019 06:39 AM | Last Updated : 11th September 2019 06:39 AM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டுக்கு செவ்வாய்க்கிழமை 15 டன் பூக்கள் வரத்து இருந்தது. பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக கோவையில் மலையாள மக்கள் அதிக அளவில் வசிப்பதால் தமிழர்களின் பண்டிகையைபோல, ஓணமும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூக்களால் அலங்கரிக்கப்படும் அத்தப்பூ கோலம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி பயன்படுத்துவர்.
கோவை பூ மார்க்கெட்டுக்கு தினசரி சராசரியாக 2 டன் பூக்களும், முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் பூக்கள் வரத்து 5 டன்னாக இருக்கும். ஆனால், ஓணத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 15 டன் பூக்கள் வரத்து இருந்தது.
மல்லிகை, முல்லை, செவ்வந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், துளசி, கோழிக்கொண்டை உள்பட அனைத்து வகைப் பூக்களின் வரத்து அதிக அளவில் இருந்தது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பாலக்காடு உள்பட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் பூக்கள் வாங்க கோவை பூ மார்க்கெட்டில் குவிந்தனர்.
பூக்களின் விலை விவரம் கிலோவில்: செவ்வந்தி-ரூ.50, செண்டுமல்லி-ரூ.60, அரளி-ரூ.140, வாடாமல்லி-ரூ.100, சம்பங்கி-ரூ.200, முல்லை-ரூ.240, மல்லிகை-ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. விசேஷ தினமாக இருந்தாலும் பூக்கள் விலை அதிகரிக்காததால் பூக்கள் வாங்க வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் யு.வி.எஸ்.செல்வகுமார் கூறுகையில், ஓணத்துக்கு செவ்வந்தி, செண்டுமல்லி, வாடாமல்லி ஆகிய உதிர்க்கும் மலர்களையே அதிக அளவில் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர்.
இவ்வகையானப் பூக்கள் ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் மற்றும் நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் வருகின்றன. இதில் பூக்களின் விலை அதிகரிக்காததால் பொதுமக்களும் கூடுதலாகவே பூக்களை வாங்கிச் சென்றனர்' என்றார்.