தக்காளியில் இருந்து மதிப்புக் கூட்டு பொருள்கள் உற்பத்தி குறித்து பயிற்சி
By DIN | Published On : 11th September 2019 06:41 AM | Last Updated : 11th September 2019 06:41 AM | அ+அ அ- |

கோவை, பூலுவப்பட்டியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் 1,900க்கும் அதிகமான ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பருவத்துக்கு 98 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.
விளைச்சல் அதிகரிக்கும்போது, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், வீணாக கொட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. தவிர 30 முதல் 35 சதவீதம் வீணாக்கப்படும் தக்காளிகளை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக உற்பத்தி செய்து பயன்படுத்த வேளாண் விற்பனைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் தொண்டாமுத்தூர் வட்டாரம் பூலுவப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் - வணிகம்) விஷ்ணுராம் மேத்தி தலைமை வகித்து பேசுகையில், "ஆண்டுதோறும் தக்காளி விளைச்சல் அதிகரிக்கும்போது, வீணாக கொட்டப்படும் தக்காளிகளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
தக்காளியில் இருந்து கூழ், ஜாம், ஊறுகாய் உள்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யலாம். தக்காளி கூழ் உற்பத்தியை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும்போது, தக்காளியை கூழாக்கி விற்பனை செய்யதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.