பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் மீது புகார்
By DIN | Published On : 11th September 2019 06:36 AM | Last Updated : 11th September 2019 06:36 AM | அ+அ அ- |

கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையத்தில் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக காவலர் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் கீரணத்தத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். அப்போது அங்குள்ள மதுபானக் கடையில் இருந்து காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்துக் கொண்டே சரண்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த சரண்யா, தனது கணவருக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அருகில் இருந்தவர்களிடம் கீரணத்தம் செல்ல வழி கேட்டுள்ளார். அதற்கு அந்த காவலர், " நான் வழி காட்டுகின்றேன்' என்று கூறி காட்டு வழியாக செல்லும் பாதையை காண்பித்துள்ளார். அப்போது அந்த காவலர் மதுபோதையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வழியாக சரண்யா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் அந்தக் காவலர் அவரைப் பின் தொடர்ந்து சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த கடையில் சரண்யா தஞ்சமடைந்துள்ளார். அந்தக் கடையில் இருந்தவரிடம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அதற்குள் கடை உரிமையாளர் வீட்டுக்கு சிலிண்டர் வந்ததால் அதை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இதையடுத்து அந்தக் காவலர் சரண்யாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் அங்கு வந்துள்ளார். இதையடுத்து அந்தக் காவலர் அருகில் இருந்த கடைக்கு உள்ளே சென்றுவிட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கடைக்குள் சென்று அந்த காவலரை பிடித்து வந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்துள்ளார்.