மூன்றாவது திருமணம் செய்ய முயன்றவரைத் தாக்கிய மனைவிகள்
By DIN | Published On : 11th September 2019 06:37 AM | Last Updated : 11th September 2019 06:37 AM | அ+அ அ- |

சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றவரை அவரது இரண்டு மனைவிகள் மற்றும் உறவினர்கள் அடித்து, உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், சூலூர், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செளந்தர்ராஜ் மகன் அரங்க அரவிந்த் தினேஷ் (26). இவர், ராசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருப்பூர், கணபதி பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகள் பிரியதர்ஷினிக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் திருமணமான 15 நாள்களில் இருந்தே மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.
பிரியதர்ஷினி திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தற்போது இருந்து வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த் கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகள் அனுப்பிரியா ( 23) என்பவரை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அனுப்பிரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அரவிந்த், அனுபிரியாவையும் கொடுமைப்படுத்தி , அவரது குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அனுப்பிரியா தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அரங்க அரவிந்த் தினேஷ் கல்யாண வலைதளத்தில் மூன்றாவதாக மணமகள் தேடி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத்தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியா குடும்பத்தினரும்
அரவிந்தன் பணியாற்றி வரும் தொழிற்சாலைக்கு சென்று தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த அரவிந்தனை அவரது இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சூலூர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் அரவிந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.