சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை நூல் தமிழுக்குச் சீர்வரிசை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் புகழாரம்

சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை என்ற நூல் தமிழுக்குச் சீர்வரிசை என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை என்ற நூல் தமிழுக்குச் சீர்வரிசை என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை நூல் அறிமுக விழா கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா நூல் அறிமுக உரையாற்றினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் நூலை அளிக்க, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது: 
தினை, புலவர்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்ட புறநானூற்று நூலை, இவர் மன்னர்கள், வீரம் வரிசையில் தொகுத்து, அதில் தனது ஆய்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 
புறநானூறு மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார். தற்காலத்து இளைஞர்களுக்கும் புரியும் வகையில் படைத்திருப்பது நூலின் தனிச் சிறப்பு. குறுமன்னர்கள், நிலக்கிழார்கள், புலவர்கள் குறித்து வரிசையாக எடுத்துரைத்து, தமிழுக்குச் சீர்வரிசை கொடுத்துள்ளார் என்றார். 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் பேசுகையில், சாலமன் பாப்பையா புறநானூற்றை எளிமையாகப் படைத்து தனது தமிழ்ப் பற்றைப் பறைசாற்றியுள்ளார். விரைவில் அகநானூறுக்கும் அவர் புதிய வரிசை வகையை எழுத வேண்டும் என்றார்.
சாலமன் பாப்பையா பேசுகையில், புதியப் படைப்பிலக்கியங்களை தமிழ் உலகிற்குத் தந்த சிற்பி பாலசுப்பிரமணியம் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நூலை விமர்சனம் செய்தது நான் பெற்ற பேறு. முதன் முதலில் எனக்கு தமிழறிஞர் விருது கோவையில்தான் வழங்கப்பட்டது. அதே மண்ணில் தற்போது, எனது நூல் அறிமுக விழா நடைபெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
சேரன், சோழன், பாண்டியன் மற்றும் குறுநில மன்னர்கள் மட்டுமின்றி மேட்டுக்குடி, சாதாரண மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் புறநானூற்றில் உள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம் குறித்து இன்றைய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இந்த நூல் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com