380 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள்
By DIN | Published On : 22nd September 2019 05:41 AM | Last Updated : 22nd September 2019 05:41 AM | அ+அ அ- |

கோவை, தொண்டாமுத்தூர், குறிச்சி, செல்வபுரம் பகுதிகளைச் சேர்ந்த 380 பெண்களுக்கு ரூ.95 லட்சம் மதிப்பில் அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க, வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், நலிவுற்றோர்கள் உள்ளிட்டவர்களுக்கு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 949 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 32 லட்சமும், 2018-19 ஆம் நிதியாண்டில் 750 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 87 லட்சமும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 4, 949 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் கு.செல்வராசு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...