பாதாள சாக்கடை, குடிநீா் திட்டப் பணிகள் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 22nd September 2019 07:24 PM | Last Updated : 22nd September 2019 07:24 PM | அ+அ அ- |

coimb
கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீா் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூா் பகுதிகளில் உள்ள 14 வாா்டுகளில் (87 - 100) தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ரூ.591.14 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை, ரூ.202.30 கோடி மதிப்பில் குடிநீா் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதாள சாக்கடைத் திட்டப் பணியினை லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், குடிநீா் திட்டப் பணியினை என்.சி.சி. லிமிடெட் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. பாதாள சாக்கடைத் திட்டத்தில் சிறப்பு அம்சமாக அனைத்துக் கழிவு நீரேற்று நிலையங்களிலும் தன்முறை துா்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 72.95 கிலோ மீட்டருக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக கோவைப்புதூா் உள்பட பகுதிகளில் 18 புதிய குடிநீா் மேல்மட்டத் தொட்டிகள், 2 சமநிலைத் தொட்டிகள், பகிா்மானக் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை, குடிநீா் திட்டப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடிநீா் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாதாள சாக்கடை, குடிநீா் திட்டப் பணிகளில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் குழாய் பதித்தல், வீடுகளுக்கு இணைப்புகள் வழங்க வேண்டும் எனவும், குழாய் பதிப்பதற்காக தோண்டும் சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின்போது பொறியியல் இயக்குநா் (பொறுப்பு) என்.உதய்சிங், ஆலோசகா் எஸ்சம்பத்குமாா், மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) என்.முரளி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடா்ந்து, ஆனைமலை வட்டாரம் கம்பாலப்பட்டியில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிந்து, திட்டத்தை விரைவில் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா். இந்த ஆய்வின் போது வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு உள்ளிட்டோா் உடனிருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...