மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்: மேலும் 2 விற்பனைக் கூடங்களில் அமலாகிறது
By DIN | Published On : 22nd September 2019 05:42 AM | Last Updated : 22nd September 2019 05:42 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில், மேலும் 2 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, கோவை, தொண்டாமுத்தூர், அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, சூலூர், ஆனைமலை ஆகிய 10 இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்றுப்பகுதி கிராமங்களில் விளைவிக்கப்படும் விளைபொருள்களை கொண்டுவந்து இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் வாரம் ஒருநாள் ஏலம் நடத்தப்படுகிறது. இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு விளைபொருள்களை கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்யும் வகையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக நாடு முழுவதும் 500- க்கும் மேற்பட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டன. தமிழகத்தில் 34 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், கோவை மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூர் ஆகிய 2 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மட்டுமே இணைக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை அமல்படுத்தக் கோரி கோவை விற்பனைக் குழு சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதில், கோவை, கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை விற்பனைக் குழு முதுநிலை செயலாளர் கெüசல்யா மோகன் கூறியதாவது:
கோவையில் ஏற்கெனவே 2 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடுத்தக்கட்டமாக கோவை, கிணத்துக்கடவு விற்பனைக் கூடங்களிலும் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக அறைகள், கணினிகள் அமைக்கப்படும். தவிர வர்த்தம் மேற்கொள்ள விவசாயிகள், வியாபாரிகளுக்கு உதவும் வகையில் அலுவலர்களும் நியமிக்கப்படுவர்.
இதில் அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பாதுகாப்பு, உடனடி பணம் உள்பட பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன. இத்திட்டத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை சாளர உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமத்தை பெற்றிருந்தால் மட்டுமே அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முடியும் என்றார்.