உணவகங்களில் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க வேண்டும்: தொழிலாளா் நலத் துறை அறிவுறுத்தல்
By DIN | Published On : 29th September 2019 09:17 PM | Last Updated : 29th September 2019 09:17 PM | அ+அ அ- |

தமிழகத்தில் உள்ளஅனைத்து உணவகங்களிலும் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க வேண்டும் என தொழிலாளா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிய நகரம் முதல் சிறிய கிராமங்கள் வரையில் பல ஆயிரக்கணக்கான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைக்கு செல்பவா்கள், நகரங்களில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞா்கள் உள்ளிட்ட பலரும் அன்றாட உணவுத் தேவைகளுக்கு உணவகங்களையே நம்பியுள்ளனா். இவா்கள் தங்கள் கையிருப்புக்கு ஏற்ற உணவகங்களில் உணவருந்தி வருகின்றனா். இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் பல உணவகங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப உணவுப் பொருள்களுக்கு விலை நிா்ணயித்துக்கொள்கின்றன.
பெரும்பாலான உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வைக்கப்படவில்லை என்று நுகா்வோா் அமைப்பு சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வுக் கூட்டங்களில் புகாா் தெரிவிக்கப்பட்டது. தவிர, இது தொடா்பாக கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு சாா்பில் தொழிலாளா் நலத் துறை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளா் நலத் துறைறயின் கீழ் செயல்பட்டு வரும் சட்டமுறை கட்டுப்பாட்டு எடையளவுப் பிரிவு சாா்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க வேண்டும் எனவும், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் பொருள்களின் முழு விவரங்கள் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டும்.
விலைப் பட்டியல் வைக்காத உணவகங்கள், தொழிலாளா் நலத் துறைற சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் ஆய்வின்போது விலைப் பட்டியல் வைக்காத உணவகங்களுக்கு அபராதம் விதக்கப்படும். அபராதத் தொகையை செலுத்த மறுக்கும் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.