தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
By DIN | Published On : 29th September 2019 03:27 AM | Last Updated : 29th September 2019 03:27 AM | அ+அ அ- |

அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் நடைபெற்ற தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது:
தொழிலாளர் நலவாரியங்கள் 16 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தொழிலாளர்கள் அந்தந்த நலவாரியங்களில் உறுப்பினராகி இருந்தால் முதியோர் உதவித் தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம், ஊனம் ஏற்பட்டால் உதவித் தொகை, உறுப்பினர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும். இந்த முகாமை பயன்படுத்த முடியாதவர்கள் கோவை-திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் தொழிற்சங்கத்தில் பணிச் சான்று பெற்று விண்ணப்பித்தால் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் என்றார்.
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பம் அளித்தனர். நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் ரேனியல், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.