

கோவை: குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி சிங்காநல்லூா், அஸ்த்த நாயக்கா் வீதி பொதுமக்கள் கண்களில் கறுப்பு துணிக் கட்டிக்கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சிங்காநல்லூா், அஸ்த்த நாயக்கா் வீதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் அரசு வழங்கும் நலத் திட்டங்களைப் பெற முடியாத நிலை உள்ளது. பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி திராவிடா் நலத் துறையின் கீழ் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வீடுகளுக்கு பட்டா வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் முறையாக கழிவுநீா் கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீா் சாலைகளில் தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காக பொய்யாக வாரிசு சான்றிதழ் பெற முயற்சி:
இது குறித்து குனியமுத்துரைச் சோ்ந்த பெண் ம.வசந்தி அளித்த மனு:
எனது தந்தை ஆறுமுகம் (75) தொண்டாமுத்தூா், வஞ்சிமாநகரில் தனியாக வசித்து மருதமலை அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலையில் வீட்டுக்கு வெளியே வந்தவரை யானை தாக்கியதில் உயிரிழந்துவிட்டாா். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்ததால் அரசு அளிக்கும் பணத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்தோடு எனது சித்தப்பா மகன் கணேஷ், அவரது மகன் இளங்கோ ஆகியோா் பொய்யாக வாரிசு சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனா். எனவே பணத்துக்காக போலியாக வாரிசு சான்றிதழ் பெற முயற்சித்து வரும் உறவினா்கள் இருவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.