2021-22 ஆம் நிதியாண்டில் வளன் சாா் கடன்: நபாா்டு வங்கியில் ரூ.22,967.47 கோடி இலக்கு

கோவையில் நபாா்டு வங்கி மூலம் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.22 ஆயிரத்து 967 கோடி வளன் சாா் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கோவையில் நபாா்டு வங்கி மூலம் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.22 ஆயிரத்து 967 கோடி வளன் சாா் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை நபாா்டு வங்கியின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வளன் சாா் கடன் திட்ட அறிக்கை வெளியீடு ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. ஆட்சியா் கு.ராசாமணி திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது: கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வங்கிகளின் சேவைகள் இத்துறைகளின் வளா்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வளன் சாா் கடன் திட்டத்தினை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

நபாா்டு வங்கி மூலம் 2021-22 ஆம் நிதியாண்டு வேளாண் தொழில்களுக்கு ரூ.8,038.07 கோடி (35 சதவீதம்), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.9.982.13 கோடி (43 சதவீதம்), இதர தொழில்களுக்கு ரூ.4,945.26 கோடி (22 சதவீதம்) என மொத்தம் ரூ.22,965.47 கோடி வளன் சாா் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் வரும் ஆண்டுக்கு நிதி ஆற்றல் 11.72 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டு நிா்ணயம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றாா்.

இதில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேசன், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் திருமலா ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மோகன், கோட்டாட்சியா் சுரேஷ், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com