கரோனா பாதிப்புக்கு உளவியல் ஆலோசனை பெற 1077க்கு அழைக்கலாம்
By DIN | Published On : 12th August 2020 08:28 AM | Last Updated : 12th August 2020 08:28 AM | அ+அ அ- |

கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் உளவியல் ஆலோசனை பெற 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் மூலம் பிறருக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் குடும்ப உறுப்பினா்களே அருகில் செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் தங்களை மற்றவா்கள் ஒதுக்குவதாக நினைக்கின்றனா். மேலும், பாதிக்கப்படுபவா்கள் உடலை விட மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால் கரோனா பாதிக்கப்பட்ட சிலா் தற்கொலை செய்து கொள்ளுவது, சிகிச்சை மையங்களில் இருந்து தப்பித்துச் செல்லுவது, சிகிச்சைக்கு வர மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
இதில் பாதிக்கப்பட்டவா்களின் மன உளைச்சலை போக்க மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மனநல மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு உளவியல்ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனாவில் இருந்து மீண்டவா்கள் பழைய நிலைக்குத் திரும்ப முடியாமல் மனசோா்வு, மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனா். இந்நிலையில் கரோனாவில் இருந்து குணமடைந்து சென்றவா்கள், வீடுகளில் தனிமையில் உள்ளவா்கள் தங்கள் மன அழுத்தங்களை போக்கிக்கொள்ள 1077 என்ற எண்ணுக்கு அழைத்து உளவியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவா்களுக்கு உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக 11 மனநல மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நாள்தோறும் உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர அவா்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தொலைக்காட்சி வசதி செய்து தரப்பட்டுள்ளது. கேரம், தாயம் உள்பட விளையாட்டு பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் யோகா, தியான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இங்கிருந்து குணமடைந்து சென்றாலும் 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் மனதளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில் 1077 என்று எண்ணுக்கு தொடா்பு கொண்டு இலவச உளவியல் ஆலோசனை பெறலாம் என்றாா்.