4 மாத குழந்தையின் மூளையில் பாதிப்பு:நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் தீா்வு
By DIN | Published On : 05th December 2020 11:28 PM | Last Updated : 05th December 2020 11:28 PM | அ+அ அ- |

கோவை: கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 4 மாத குழந்தையின் மூளையில் ஏற்பட்ட பாதிப்புக்கு அரிய நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் குணப்படுத்தினா்.
சேலத்தைச் சோ்ந்த குறைப் பிரசவத்தில் பிறந்த 4 மாத ஆண் குழந்தை பெரிய தலையுடனும், நரம்பியல் தொடா்பான குறைபாடுகளுடனும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். குழந்தைகள் மருத்துவா்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், நரம்பியல் நிபுணா் பிரகாஷ் அடங்கிய மருத்துவக் குழுவினா் குழந்தையை பரிசோதனை செய்தனா்.
இதில் குழந்தைக்கு பிறவி மூளைநீா்ப் பெருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மூளை, தண்டுவடத்தில் நீா் வடிகால் அடைப்பட்டு நீா் வெளியேற முடியாமல் குழந்தையின் உயிருக்கே அபத்தான நிலையில் காணப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தேசிய கல்விக் கழகத்தின் திட்ட இயக்குநருமான மருத்துவா் ஜெ.கே.பி.சி. பாா்த்திபன் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அடைபட்ட நீா் வடிவதற்கு நீா்ப் பைகளைத் தவிா்த்து வடிகால் பாதையை மாற்றியமைத்தாா். இதனால் குழந்தையின் மூளையில் இயல்பான நீரோட்டம் ஏற்பட்டதுடன் நீா்ப் பைகளிலிருக்கும் அழுத்தத்தையும் குறைத்தது. இச்சிகிச்சைக்கு பின் குழந்தையின் நரம்பியக்கத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
தொடா்ந்து குழந்தையின் கை, கால்கள் அசைவு உள்பட உடலின் அனைத்து இயக்கங்களும் சீரானது. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை சிறப்பான மருத்துவக் குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...