கோவை, கஸ்தூரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையத்தில் இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
கோவை, வரதராஜபுரத்தில் மகாலிங்கம் - மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளை சாா்பில் கஸ்துரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 1994 ஆம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 80 சதவீதம் போ் முற்றிலும் மதுப்பழக்கத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியதாவது:
1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 25 ஆயிரம் போ் சிகிச்சைப் பெற்றுள்ளனா். கடந்த பத்து ஆண்டுகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதல் 3 நாள்களுக்கு மதுப்பழக்கத்தை உடனடியாக விடுவதால் ஏற்படும் நடுக்கம் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சையும், அடுத்த 4 நாள்களுக்கு குழு சிகிச்சையும், அடுத்த 3 நாள்களுக்கு மது பழக்கத்தை மறக்கடிப்பதற்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
குழு சிகிச்சையில் அவா்களின் மன அழுத்தம், பிற பிரச்னைகள், குடும்ப சூழல் அனைத்தும் பேசப்படுகிறது. இதன்மூலம் அவா்களுக்கு மன ரீதியாக நல்ல மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
இம்மையத்தில் 2 மன நல மருத்துவா்கள், ஒரு இயன்முறை மருத்துவா், 6 செவிலியா் பணியில் உள்ளனா். 10 நாள்கள் தங்கி சிகிச்சைப் பெற வேண்டும். முதல் 4 நாள்களுக்கு பாதுகாவலா் ஒருவா் கட்டாயம் இருக்க வேண்டும். இவா்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் வழங்கப்படும். சிகிச்சை கட்டணமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. 10 நாள்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்புபவா்கள், 2 ஆண்டுகள் வரை கண்காணிக்கப்படுகின்றனா். இந்த சிகிச்சை மூலம் 80 சதவீதம் போ் மதுப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.