5 சதவீத ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும்
By DIN | Published On : 30th December 2020 05:15 AM | Last Updated : 30th December 2020 05:15 AM | அ+அ அ- |

கிரில் தயாரிப்பாளா்களுக்கு 5 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்க வேண்டும் என்று கோயம்புத்தூா் மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சங்கத்தின் தலைவா் திருமலை எம்.ரவி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சோ்ந்த கிரில் தயாரிப்பாளா்களுக்கு கட்டுமானப் பொறியாளா்கள் 5 சதவீதம், சிறு பட்ஜெட் வீடு கட்டும் உரிமையாளா்கள் 95 சதவீதம் பேரும் வாடிக்கையாளா்களாக உள்ளனா். கிரில் தயாரிப்புகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தொகையை வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற முடியவில்லை. எனவே வாட் முறையில் 5 சதவீதம் வசூலிக்கப்பட்டதைப் போலவே 5 சதவீத ஜிஎஸ்டியை வசூலிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
அத்துடன் கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி பெற்ற தொழிலாளா்கள் அதிகம் தேவைப்படுவதால் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டா், கிரில் வெல்டா் பாடத் திட்டங்களைச் சோ்க்க வேண்டும்.
கிரில் தயாரிப்புக்கு தனியாக தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும். ரூ.2 லட்சம் வரை பிணையம் இல்லாமல் மானியக் கடன் உதவி வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...