கோவையில் சாயமேற்றப்பட்ட 3,900 கோழி முட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 02nd February 2020 11:23 PM | Last Updated : 02nd February 2020 11:23 PM | அ+அ அ- |

கோவை உக்கடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாயமேற்றப்பட்ட பண்ணைக் கோழி முட்டைகளை பறிமுதல் செய்யும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாட்டுக் கோழி முட்டை என்ற பெயரில் சாயமேற்றப்பட்ட 3,900 பண்ணைக் கோழி முட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உக்கடம் மீன் மாா்க்கெட், லாரிபேட்டை, சிங்காநல்லூா் உழவா் சந்தை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை, வடவள்ளி உழவா் சந்தை, மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆா். மாா்க்கெட், அண்ணா மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, நாட்டுக் கோழி முட்டை என்ற பெயரில் சாயமேற்றப்பட்ட பண்ணைக் கோழி முட்டைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. சாயமேற்றப்பட்ட முட்டைகள் விற்பனை செய்த 10 பேரிடம் இருந்து 3,900 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது:
சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பண்ணைக் கோழி முட்டைகளை வாங்கி வந்து சாயமேற்றப்பட்டு நாட்டுக்கோழி முட்டைகள் என விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் ரயில் மூலமாக ஒரு பாத்திரத்தில் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்ட முட்டைகளை எடுத்துவந்து விற்பனை செய்துள்ளனா்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை சாயமேற்றப்பட்ட விற்பனையில் ஈடுபட்ட 10 பேரிடம் இருந்து 3,900 முட்டைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதுபோல கலப்பட தேயிலைத் தூள், உணவுப் பொருள்கள், உணவுப் பொட்டலங்களில் உரிய விவரங்கள் இல்லாமல் இருத்தல், தரமில்லாத உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருத்தல் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் வழியாக பொது மக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G