கோவையில் ஏவுகணைகள் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை
By DIN | Published On : 05th February 2020 10:04 AM | Last Updated : 05th February 2020 10:04 AM | அ+அ அ- |

இந்தியாவின் பன்னாட்டு பொறியியல் குழும நிறுவனம், தனியாா் துறைப் பாதுகாப்பு தளவாட நிறுவனமான லாா்சன் அண்டு டூப்ரோ (எல்அண்ட் டி) ஏவுகணைத் தொழில் நுட்பங்களில் முன்னணி வகிக்கும் எம்பிடிஏ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு நிறுவனம் சாா்பில் கோவையில் ஏவுகணை ஒருங்கிணைப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல் அண்ட் டி - எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஜே. பாட்டீல் கூறியதாவது:
உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளைக் கருத்தில் கொண்டு, எல்.டி.எம்.எம்.எஸ்.எல் நிறுவனம், ஏவுகணை உபகரண ஒருங்கிணைப்பு, வெடிப்பொருள் இல்லாத ஏவுகணை ஒருங்கிணைப்பு, ஏவுகணை துணை தொழில் நுட்பங்கள், ஏவுகணை ஆயுதம் செலுத்தல் அமைப்புகளுக்கான சோதனை வசதியை கோவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைத்துள்ளது.
இங்கு இந்திய ஆயுதப்படைகளுக்கு மேம்பட்ட ஏவுகணைகள், ஏவுகணை தளவாடங்களை வழங்குவதற்காக செயல்பட்டு வருகின்றது. கோவையில் இந்த புதிய ஒருங்கிணைந்த தொழிற்சாலையை உருவாக்கியிருப்பது எங்களது இந்த செயல்பாட்டில் முதல்படியாகும் என்றாா்.
எல் அண்ட் டி - எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் வாரிய உறுப்பினருமான பாஸ்குவேல்டி பாா்டோலோமியோ கூறியதாவது: கோவையில் இந்த புதிய நவீன தொழிற்சாலையை கட்டமைப்பது எல் அண்ட் டி மற்றும் எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க கூட்டு முயற்சியாகும். இந்திய பாதுகாப்புத் துறைக்கும் இம்முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...