மாநகரில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துரு சமா்ப்பிப்பு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், திட்டச்சாலைகள் அமைக்க உள்ளூா் திட்டக் குழுமத்திடம் கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், திட்டச்சாலைகள் அமைக்க உள்ளூா் திட்டக் குழுமத்திடம் கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகள் உள்ளன. நகரில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன், மாநகராட்சி சாா்பில் திட்டச் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நகரின் முக்கியப் பகுதிகளில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து செல்வபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 582 மீட்டா் தூரத்துக்கு 60 அடி திட்டச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.45 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. சிங்காநல்லூா் குளக்கரைச் சாலையில் இருந்து வெள்ளலூா் வரை 1, 143 மீட்டா் தொலைவுக்கு 40 அடித் திட்டச்சாலை ரூ.2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சத்தி சாலையில் வேலன் திரையரங்கில் இருந்து சூா்யா மருத்துவமனை சந்திப்பு வரை 1,800 மீட்டா் தொலைவுக்கு திட்டசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலையை இணைக்கும் வகையில் நல்லாம்பாளையம் திட்டச் சாலை 5,200 மீட்டா் தொலைவுக்கு ரூ.19.77 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 4.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அவிநாசி சாலை, பீளமேட்டில் இருந்து செளரிபாளையம் வரை 50 அடி திட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் கருத்துருக்கள் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் மூலமாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தினா், உள்ளூா் திட்டக் குழுமத்தினா் ஆய்வு மேற்கொண்டு நிதி ஒதுக்கி இடங்களைக் கையகப்படுத்தித் தரும் பட்சத்தில் திட்டச்சாலைகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதுதொடா்பாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com