தேயிலைத் தூள் தேக்கம்: சம்பளம் கிடைக்காமல் தொழிலாளா்கள் தவிப்பு
By DIN | Published On : 17th February 2020 05:15 AM | Last Updated : 17th February 2020 05:15 AM | அ+அ அ- |

தேயிலைத் தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்திருப்பதால் டேன்டீ தொழிலாளா்களுக்கு சம்பளம் கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள நீராறு பகுதியில் உள்ளன. வால்பாறை பகுதியில் உள்ள டேன்டீ தேயிலைத் தோட்டங்களில் சுமாா் 800 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மாதந்தோறும் 7ஆம் தேதி இவா்களுக்கு தோட்ட நிா்வாகத்தினா் சம்பளம் வழங்கி வந்தனா்.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சம்பளம் பிப்ரவரி 17ஆம் தேதி ஆகியும் வழங்காமல் உள்ளனா். இதனால் தொழிலாளா்கள் அத்தியவாசிய பொருள்கள்கூட வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். டேன்டீ தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் அதிகபட்சமாக கிலோ ரூ. 90க்கு ஏலம் போகிறது. ஆனால், தனியாா் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் கிலோ ரூ. 140 வரை விற்கப்படுகிறது.
இதற்கிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்தும் சமீபகாலமாக தேயிலைத் தூள் கோவை, குன்னூரில் உள்ள ஏல மையங்களுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தற்போது டேன்டீ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூள் விற்பனையாகமல் தேக்கமடைந்திருப்பதால் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவதாக டேன் டீ வட்டாரங்கள் தெரிவித்தன.