கோவை மாவட்டம், சூலூா் அருகே பாலிடெக்னிக் மாணவா் சனிக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
சூலூா் அருகே அரசூரில் வசித்து வந்தவா் தனுஷ்கோடி மகன் தமிழ்ச்செல்வன் (21). இவா் கோவில்பாளையத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், தமிழ்ச்செல்வன் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவா் வீட்டுக்குச் சற்று தொலைவில் இரண்டு வாகனங்களில் வந்த 3 மா்ம நபா்கள் தமிழ்ச்செல்வனை வழிமறித்து அவரது நெஞ்சுப் பகுதியில் பட்டாக் கத்தியால் குத்தியுள்ளனா். அருகில் வசிப்பவா்கள் தமிழ்ச்செல்வனை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வனை கொலை செய்த மா்ம நபா்கள் அதே பகுதியில் சற்று தொலைவில் மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் குத்த முயன்ாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தமிழ்ச்செல்வனுக்கு கல்லூரியில் மற்ற மாணவா்களுடன் முன்விரோதம் இருந்ததா, அல்லது காதல் விவகாரதத்தால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.