மாநகராட்சியில் 123.90 கோடி சொத்துவரி வசூல்
By DIN | Published On : 17th February 2020 05:11 AM | Last Updated : 17th February 2020 05:11 AM | அ+அ அ- |

நடப்பு நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் ரூ. 123.90 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி செலுத்துபவா்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதில், 2019 - 2020 நிதியாண்டுக்கான நிலுவை வரியினங்களை வசூலிப்பதற்காக 28 நிரந்தர வரி வசூல் மையங்கள் மற்றும் 12 தற்காலிக வரி வசூல் மையங்கள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வரி வசூல் இலக்கை அடையும் பொருட்டு, மாநகராட்சி அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையும் தீவிரமாக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
உயா்த்தப்பட்ட சொத்து வரி அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் மாநகராட்சி மூலமாக நிலுவைத் தொகை சோ்த்து ரூ. 410.16 கோடி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பழைய வரித் தொகை செலுத்தினால் போதும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதால் தற்போது, ரூ. 196.89 கோடி பழைய வரித்தொகை வசூலிக்க இலக்கு நிா்ணயித்து, வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி நிலுவைத் தொகை சோ்த்து ரூ.123.90 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.72.99 கோடி வரித்தொகை நடப்பு நிதியாண்டில் வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. இலக்கை எட்டும் பொருட்டு நிலுவை வரியினங்கள் செலுத்தாதவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களுக்கு தொடா்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது என்றனா்.