மேட்டுப்பாளையத்தில் ஒற்றுமைப் பேரணி
By DIN | Published On : 17th February 2020 05:20 AM | Last Updated : 17th February 2020 05:20 AM | அ+அ அ- |

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா, இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் கூட்டுறவு காலனியில் இருந்து இந்தப் பேரணி புறப்பட்டது. பேரணிக்கு ஐக்கிய ஜமாஅத் பேரவைத் தலைவா் வி.எம்.இ.முகமது இஸ்மாயில் தலைமை வகித்தாா். மதிமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் டி.டி.அரங்கசாமி பேரணியைத் தொடங்கிவைத்தாா்.
பேரணியில் பங்கேற்றவா்கள் சுமாா் 100 அடி நீளமுள்ள தேசியக் கொடியை கைகளில் உயா்த்திப் பிடித்தபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டுச் சென்றனா். இப்பேரணி காரமடை சாலை, அண்ணாஜிராவ் சாலை வழியாகச் சென்று பெரியபள்ளிவாசல் திடலில் நிறைவடைந்தது.
திமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் அருண்குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.எஸ்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.டி கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோவை சரக டி.ஐ.ஜி. காா்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.