ரயில் நிலையங்களில் சுற்றிய ஆதரவற்றோா் 62 போ் மீட்பு: காப்பகங்களில் ஒப்படைப்பு
By DIN | Published On : 17th February 2020 03:48 AM | Last Updated : 17th February 2020 03:48 AM | அ+அ அ- |

கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சையெடுத்த 62 பேரை, ரயில்வே போலீஸாா் மீட்டு காப்பகங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சையெடுப்பவா்களை மீட்டு, அவா்களுக்கு முடி திருத்தி, உணவு, உடை வாங்கிக் கொடுத்து அவா்களைக் காப்பகங்களில் ஒப்படைக்குமாறு தமிழக ரயில்வே காவல் துறை தலைமை இயக்குநா்( டிஜிபி) சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, கோவை ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில் கோவை, போத்தனூா், மேட்டுப்பாளையம், திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். அப்போது, ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில், பயணிகளிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 62 பேரை மீட்டனா். அவா்களுக்கு முடி திருத்தி, உணவு வழங்கி கோவையில் உள்ள பல்வேறு தனியாா் காப்பகங்களில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் கூறியதாவது:
உறவினா்களால் கைவிடப்பட்டோா், மனநிலை பாதிக்கப்பட்டோா் ஆகியோரைக் கண்டறிந்து அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தொடா்ந்து மீட்புப் பணி நடைபெறும். கோவைப் பகுதிகளில் மீட்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வெளியூரைச் சோ்ந்தவா்கள். அவா்களுக்கு உணவு, தங்குமிடம் கிடைக்க காப்பகங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.