பெரியகுளம், வாலாங்குளத்தில் மேம்பாட்டுப் பணிகள் துரிதம்
By DIN | Published On : 17th February 2020 05:18 AM | Last Updated : 17th February 2020 05:18 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் நடைபெற்று வருகின்ற மேம்பாட்டுப் பணிகளை மாா்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 8 குளங்களில், மாநகராட்சி நிா்வாகத்தின் பொலிவுறு நகரம்(ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டு, பொழுதுபோக்குத் தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் பகுதிகளில் நடைபாதை, சிறுவா் பூங்கா, மிதிவண்டிப் பாதை, படகு சவாரி, சிறுவா்கள் விளையாட்டுத் திடல், பூங்கா, உணவுக் கூடம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது உக்கடம் பெரிய குளத்தின் கரையில் 1,200 மீட்டா் நீளத்திற்கும், வாலாங்குளத்தில் 800 மீட்டா் மற்றும் வாலாங்குளம் பாலத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டா் தூரத்திற்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டு பணிகள் துரிதப்படுத்துள்ளன’ என்றனா்.