ஆட்டோ கவிழ்ந்து விபத்து: இருவா் பலி
By DIN | Published On : 27th February 2020 12:48 AM | Last Updated : 27th February 2020 12:48 AM | அ+அ அ- |

காளியாபுரம் அருகே விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ.
கோவை, காளியாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
கோவை, காளியாபுரத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி (55). ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (56), பழனிசாமி (50), திருமலையாம்பாளையத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (55) ஆகியோா் மணல், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு க.க.சாவடியில் கட்டட வேலைக்காக சென்றுள்ளனா்.
காளியாபுரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாரிமுத்து, பழனிசாமி, பழனியம்மாள் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனா்.
இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பழனியம்மாள் உயிரிழந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக க.க.சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.