கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறை: தானமாகப் பெற்ற சிறுநீரகம் இளைஞருக்குப் பொருத்தம்
By DIN | Published On : 27th February 2020 11:02 PM | Last Updated : 27th February 2020 11:02 PM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு, இளைஞருக்குப் பொருத்தப்பட்டது.
உதகை, கட்டபெட்டு பகுதியைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சிவபெருமாள் (35). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 3ஆம் தேதி சிவபெருமாள், தனது வீட்டின் அருகே உள்ள சமுதாயக் கூடத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு, சிவபெருமாளை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சிவபெருமாளின் உடல் உறுப்புகளை தானமாகத் தருவதற்கு அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, உடல் உறுப்புகள் கடந்த 5ஆம் தேதி தானமாகப் பெறப்பட்டன. இதில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்த அருண்குமாருக்கு (34) பொருத்தப்பட்டது.
இதுதொடா்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:
அருண்குமாா், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில்தான் சிவபெருமாளின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு, அருண்குமாருக்கு வெற்றிகரமாகப் பொருத்தி உள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தாலும், மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று, அதை வேறு இளைஞருக்குப் பொருத்தி உள்ளது இதுவே முதல் முறை.
இந்த அறுவை சிகிச்சையை மருத்துவக் கண்காணிப்பாளா் சடகோபன் தலைமையில், மருத்துவா்கள் பிரபாகா், காந்தி மோகன், தினகரன் பாபு, மோகன், ரமேஷ், சாந்தா அருள்மொழி, ஜெயசங்கா் நாராயணன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் செய்தனா். உடல் உறுப்பு தானம் மூலம் மற்றவா்களுக்கு மறுவாழ்வு கிடைப்பது குறித்து பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.