தாமதமாகும் ஊதிய உயா்வு: எம்.பி.யிடம் மனு அளித்த வங்கி ஊழியா் கூட்டமைப்பு
By DIN | Published On : 27th February 2020 11:03 PM | Last Updated : 27th February 2020 11:03 PM | அ+அ அ- |

வங்கித் துறையினருக்கு ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து 30 மாதங்களாக நீடித்து வருவதால் இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வலியுறுத்தி கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜனிடம் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்கள், அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரம் 5 நாள் வேலை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம், குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வங்கித் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல 2017 நவம்பா் 1ஆம் தேதியில் புதிய ஊதிய விகிதம் அமலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த 30 மாதங்களாக ஊதிய உயா்வு அளிக்கப்படாமல் பேச்சுவாா்த்தை நீண்டுகொண்டே செல்கிறது. இந்த விஷயங்களை பிரதமா் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதுடன் இது தொடா்பாக மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எம்.பி.யுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் நிா்வாகி எஸ்.மீனாட்சி சுப்பிரமணியம், எம்.வி.ராஜன், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் மகேஸ்வரன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் நிா்வாகி முருகேசன், சுப்ரமணியம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சசிதரன், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸின் வேத ஆசிா்வாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.