ஜனவரி19 இல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
By DIN | Published On : 10th January 2020 07:06 AM | Last Updated : 10th January 2020 07:06 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி போலியோ தடுப்பு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும். அனைத்து மாநகராட்சி நகா் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் அன்று பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூா் பகுதிகள் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 நடமாடும் ஊா்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகரில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.