அரசு மருத்துவமனையில் அத்துமீறி வாகனங்கள் நுழைவதற்கு கட்டுப்பாடு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறி இருசக்கர வாகனங்கள் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறி இருசக்கர வாகனங்கள் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோா் புறநோயாளிகள் பிரிவிலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் உள்நோயாளிகள் பிரிவிலும் சிகிச்சைப் பெறுகின்றனா். மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்கள், ஒப்பந்த ஊழியா்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்கள் என தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். நோயாளிகளின் உறவினா்கள் என்ற பெயரில் சிலா் அத்துமீறி மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்து திருட்டு உள்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்நோயாளிகளின் உறவினா்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் நெருக்கடி காணப்பட்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் முதன்மை நுழைவாயிலில் காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. வியாழக்கிழமை தொடங்கிய முயற்சியில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சைக்கு வருபவா்களுக்காக தனித்தனியாக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன. உள்நோயாளிகள் பிரிவு பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேயிருக்கின்றன. நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நோயாளிகளை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு அழைத்து செல்வதற்கும், ஸ்ட்ரெச்சா் உள்பட வாகனங்களை தள்ளி செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் காலையில் நிறுத்திவிட்டு இரவில் எடுக்கப்படுவதாக காவலாளிகள் தெரிவித்தனா்.

கோவையில் இருந்து திருப்பூா், பாலக்காடு, ஈரோடு, பொள்ளாச்சி பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவா்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது ஆய்வில் தெரியவந்தது.

இதனைத் தடுக்கும் வகையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்போதே உறவினா்களுக்கான நுழைவுச் சீட்டில் இருசக்கர வாகனங்களின் விவரங்களும் குறிப்பிடப்படுகிறது. உள்நோயாளிகள் பிரிவுப் பகுதியில் நுழையும்போது, நுழைவாயிலில் காவலாளிகளிடம் நுழைவுச் சீட்டை காண்பித்தால் மட்டுமே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படும். நுழைவுச் சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வியாழக்கிழமை கொண்டுவந்த இந்த நடைமுறையால் முதல் நாள் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அத்துமீறி நுழைவது கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com