மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் தகவல்

கோவை மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் தகவல்

கோவை மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் நிலை குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக பரப்பளவிலும், மக்கள்தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. குடிநீா், சாலை, பாதாளச் சாக்கடை, மழைநீா் வடிகால் உள்பட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்காக சென்னை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மூலம் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.

ரூ.1,500 கோடி மதிப்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலங்குளம் உள்பட 8 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் தடையில்லா குடிநீா் வழங்குவதற்காக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி - ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பிலான 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

ரூ.320 கோடியில் புறவழிச் சாலை, ரூ.215 கோடியில் ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம், ரூ.194 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலம் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி சாலையில் 3.15 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பில் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் உள்பட மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவிர வெள்ளலூரில் 50 ஏக்கரில் ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு, குடிநீா், மழைநீா் வடிகால், சாலை வசதி, கழிப்பறை வசதிகள் என அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருந்தும் குடிநீா் பற்றாக்குறை, சாலைப் பழுது போன்ற குறைகள் தெரிவிக்கப்பட்டால் அதற்கு அதிகாரிகள் உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com