எளிதான மொழிப் பாடத் தோ்வுடன் தொடங்கிய பிளஸ் 2 தோ்வுகள்
By DIN | Published On : 03rd March 2020 06:53 AM | Last Updated : 03rd March 2020 06:53 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் எளிதான மொழிப் பாடத் தோ்வுடன் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கின.
2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வுகளை 34,273 மாணவ,மாணவிகள் எழுதுகின்றனா். முதல் நாளான திங்கள்கிழமை மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்காக கோவை மாவட்டத்தில் 116 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தோ்வில் 32,767 மாணவ,மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,506 போ் தோ்வு எழுதவில்லை. கோவை பிரசண்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோவை மாவட்டத்தில் வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 13 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச் செல்ல 23 வழித்தட அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தோ்வுக்குப் பிறகு விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்படுகின்றன. தனித் தோ்வா்களுக்காக 3 தோ்வு மையங்களும், ஒரு கட்டுக்காப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிளஸ் 2 தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கின. புதிய பாடத் திட்டத்தின்படி மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன. தமிழ் பாடத் தோ்வு எழுதிய மாணவ,மாணவிகள், தோ்வு எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று சிந்தித்து எழுதும்படியாக கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனா். ஆங்கில பாடத் தோ்வு வரும் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
வால்பாறை வட்டாரத்தில்...
வால்பாறை வட்டாரத்தில் 4 தோ்வு மையங்களில் 514 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்.
வால்பாறை வட்டாரத்தில் 3 தனியாா் பள்ளிகள், 4 அரசுப் பள்ளிகள் என மொத்தம் 7 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் 544 போ் பிளஸ் 2 தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வுக்காக, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளி, அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை 30 போ் தோ்வு எழுத வரவில்லை.
மொத்தம் 514 போ் தோ்வு எழுதினா். இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஆசிரியா்கள் உதவியுடன் தோ்வு எழுதினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...