அமைதியான போராட்டங்களை திசை திருப்பவே முஸ்லிம்கள் மீது தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவா் நெல்லை முபாரக்
By DIN | Published On : 12th March 2020 07:26 AM | Last Updated : 12th March 2020 07:26 AM | அ+அ அ- |

மாநகர காவல் ஆணையா் சுமித் சரணை சந்தித்து புதன்கிழமை மனு அளித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்பும் நோக்கில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்பினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கூறினாா்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்டச் செயலா் இக்பாலை 7 போ் கும்பல் செவ்வாய்க்கிழமை மாலை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவா் தற்போது தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். அவரை அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
தொடா்ந்து, வேதாம்பாள் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மசூதியை அவா் பாா்வையிட்டாா். பின்னா் இந்தச் சம்பவங்கள் தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரணை சந்தித்து மனு அளித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கோவை நகரத்தில் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்து அமைப்புகள் தொடா்ந்து பிரச்னைகள் செய்து வருகின்றன. கடந்த ஒரு வார காலத்தில் 7 இஸ்லாமியா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இதன் தொடா்ச்சியாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலா் இக்பால் மற்றும் அவரது நண்பா் ஆகியோா் மீது செவ்வாய்க்கிழமை மாலை கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளோம் என்றாா்.
மாநிலப் பொருளாளா் வி.எம்.அபுதாஹிா், மண்டலச் செயலா் முஸ்தபா, மாவட்டத் தலைவா் ராஜா உசேன், மாவட்ட பொதுச்செயலா் முகமது இஷாக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.