வஉசி பூங்காவுக்கு சிங்கம், புலிகள் வர வாய்ப்பு: அமைச்சா் தகவல்
By DIN | Published On : 12th March 2020 07:25 AM | Last Updated : 12th March 2020 07:25 AM | அ+அ அ- |

கோவை, வஉசி பூங்கா விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் விரைவில் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் வர வாய்ப்புள்ளது என அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறினாா்.
சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு விமானம் மூலம் வந்த தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, வரவேற்புக்குப் பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் தொடா்பாக தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகளுடன் நானும், அமைச்சா் ஜெயகுமாரும் நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினோம். தெலங்கானா முதல்வருடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உறுதுணையாக இருந்தாா். இந்தத் திட்டம் முழுவதும் நிறைவேறும் வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் உறுதி அளித்துள்ளாா்.
தமிழக சட்டப் பேரவையில் வனத் துறை மானியக் கோரிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோவையின் நீண்டநாள் கோரிக்கையான வஉசி பூங்கா விரிவாக்கம் தொடா்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வா், வனத் துறை அமைச்சரிடம் நான் பேசியதன் விளைவாக வஉசி பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து மத்திய அரசின் அனுமதியுடன் சிங்கம், புலி போன்ற விலங்குகள் கோவைக்கு கொண்டு வரப்படும்.
இதன் மூலம் கோவை மண்டல அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாக வஉசி பூங்கா மாறும். ஒருகாலத்தில் மூடக்கூடிய நிலையில் இருந்த வஉசி பூங்கா, தமிழக அரசு, கோவை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகளால் தற்போது அடுத்தகட்டத்துக்குச் செல்ல உள்ளது என்றாா்.